மருத்துவர்கள்

பெண்களை அச்சுறுத்தும் மூட்டுவலிக்கு பிசியோதெரபி

ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பாதிக்கும் பிரச்னையாக இருந்த மூட்டுவலி, இப்போது இளம் வயதினரை அதிலும் குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் சுமார் 18 கோடி பேருக்கு மூட்டு வலி பிரச்னை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை இல்லாமல் மூட்டு வலிக்கு இயன்முறை மருத்துவமான பிசியோதெரபி சிகிச்சை மூலம் பெரும்பாலோருக்கு தீர்வு கிடைக்கிறது என்பதுதான் மகிழ்ச்சிகரமான செய்தி.

ஏன் வருகிறது..?

முன்பு வீட்டுக்கு வீடு சைக்கிள் இருந்தது. அம்மி, ஆட்டுக்குரல் இருந்தன. குளிக்கவும், துவைக்கவும் ஆறு அல்லது கிணறுக்குப் போனார்கள். குடிப்பதற்கு தண்ணீர் இறைத்து எடுக்கவும், குடத்தில் தூக்கிவரவும் அவசியம் இருந்தது. இப்போது காரும், இருசக்கர வாகனமும் பெருத்துவிட்டது. மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பைப்பில் தண்ணீர் என்று எல்லாமே கைக்கு பக்கத்தில் வந்துவிட்டன. எனவே உடல் உழைப்புக்கு அவசியமே இல்லை. எனவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் மூட்டுத்தசை இறுகி மூட்டில் அழுத்தம் ஏற்பட்டு மூட்டுவலி வந்துவிடுகிறது.

பெண்களுக்கு ஏன் அதிகம்

ஆண்களைவிட பெண்களை இந்த மூட்டு நோய் அதிகம் பாதிக்கிறது. இதற்கு மாதவிடாய் குளறுபடிகள், உடல் பருமன், தைராய்டு பாதிப்பு, கருத்தடை உள்ளிட்ட மாத்திரைகள் பயன்படுத்துவது போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன. பெண்களிடம் ஏற்படும் ஹார்மோன் மாற்றமும் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. எல்லா வீடுகளிலும் வெஸ்டன் டாய்லெட் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதேபோல் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவது, மாடிப்படி ஏறுவதற்கு லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டர் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் மூட்டுகளின் பயன்பாடு முடங்கியே விட்டது. இவற்றோடு உடம்புக்கு சத்தான ஆகாரம் தருவதற்குப் பதிலாக ஹோட்டல் உணவுகள், துரித உணவுகள், பாக்கெட் உணவுகள் போன்றவையும் மூட்டுகளை பலவீனப்படுத்துகின்றன. 

இவை தவிர சிலருக்கு கீழே விழுந்து அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிதல், கிருமித்தொற்று, ருமாய்டு நோய், காச நோய், யூரிக் அமிலம் படிவது போன்ற காரணங்களாலும் மூட்டுவலி ஏற்படுகிறது. இதனால் மூட்டை சுற்றி உள்ள தசைகள் பலவீனமடைந்து பின்னர் அதன் சவ்வு சேதமடைகிறது. தசைகள் மற்றும் சவ்வுகளால் கடத்தப்படும் உடலின் எடை முழுவதும் முழங்கால் எலும்புகள் மூலமாகவே கடத்தபடுவதால் மூட்டு திரவத்தின் அளவு குறைந்து உராய்வு ஏற்படுகிறது. இதனால் மூட்டு தேய்ந்து நாளடைவில் முழுமையாக அதன் அமைப்பை இழந்து வலியில் துடிக்கிறார்கள்.

பிசியோதெரபி போதுமே

முழங்கால் வலி கொடுமையாகத்தான் இருக்கும். சேரில் அமரும்போதும், எழும்போதும், ஏதேனும் வெயிட் தூக்கும்போதும் அதிக துன்பத்தைக் கொடுக்கும். மாத்திரைகளாலும், மருந்து பூசுவதாலும் தீர்வு இல்லை என்றதும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டால் சரியாகிவிடும் என்றே நினைக்கிறார்கள். பெண்களுக்கு மூட்டுவலி இருந்தாலும் அவர்கள் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. தாங்கள் நிறைய இடங்களுக்கு அலைவதில்லை என்பதால், மூட்டுவலியை தாங்கிக்கொண்டு காலம் கடத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் மூட்டு வலி மிகவும் அதிகரித்த பின்னரே மருத்துவரை அணுகுகிறார்கள். இந்த எல்லா மூட்டு வலிக்கும் அறுவை சிகிச்சை அவசியமே இல்லை. பெரும்பாலான மூட்டுத் தேய்மானத்தை பிசியோதெரபி மருத்துவம் மூலம் பக்கவிளைவுகள் இல்லாமல் குணப்பத்திவிட முடியும்.

நாட்பட்ட மூட்டுவலி என்றாலும் தொடர்ந்து பிசியோதெரபி செய்துகொள்வதன் மூலம் வலியில் இருந்து நிவாரணம் பெற முடியும். மூட்டுவலி, முழங்கால் வீக்கம், வலி, ரத்தக்கட்டு போன்றவற்றை குறைப்பதற்கு பிசியோதெரபியில் வாக்ஸ், சூடு ஒத்தடம், குளிர் ஒத்தடம், மின்சார சிகிச்சை, லேசர் சிகிச்சை போன்ற ஹைடெக் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மூட்டு வலி நீக்குவதற்கு கட்டு வெந்நீர், ஐஸ் பைகள் கொண்டு வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்வதற்கும் வழி காட்டப்படுகிறது. மேலும் காலுறை, துணிக்கட்டுகள் மூலம் தீர்வு காணப்படுகிறது. கால் மூட்டுக்குக் கீழ் தலையணை வைத்தல், வலி ஏற்படும் நேரம் போதிய ஓய்வு எடுத்தல் போன்ற வழிகாட்டுதல்களும் பிசியோதெரபி மூலம் செய்யப்படுகிறது.

மூட்டுத் திரவம்

பிசியோதெரபியில் மிகச்சரியான எக்சர்சைஸ் மூலம் சரியான உடல் அசைவுகள் கொடுக்கப்படுகிறது. அதேபோல் மருத்துவ உபகரணங்கள் மூலம் உடலுக்கு சிகிச்சை வழங்கப்படுவதன் மூலம் முழங்கால் தசைகளும், மூட்டுகளும் வலிமையாக்கப்படுகின்றன. உடல் எடை குறைக்கப்படுவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படுவதன் காரணமாக முழங்கால் தசைகள் வலுவூட்டபடுகின்றன. தொடர் பயிற்சியின் மூலம் மூட்டுத் திரவம் அதிகரிக்கப்படுவதால் மூட்டு உராய்வு குறைந்துவிடுகிறது. இதன் மூலம் மூட்டு தேய்மானம் தடுக்கப்படுகிறது.

ஒருசிலர் எடுத்துக்கொள்ளும் கடுமையான பயிற்சி முறைகளும் மூட்டுக்களை சேதமடைய வைக்கின்றன. ஆகவே, மூட்டுக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ப பிசியோதெரபிஸ்ட் பரிந்துரைக்கும் பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்வது பாதுகாப்பாக இருக்கும். கால் மூட்டுவலிக்கு ஏற்ற பாதணிகள் அணியவேண்டியதும் மிகவும் அவசியம். இதையும் பிசியோதெரபிஸ்ட் பரிந்துரையில் அணிவது மூட்டுகளின் பாதிப்பைக் குறைக்கிறது.

மூட்டு வலியால் அவஸ்தைப்படுவதைவிட, அதனை முன்கூட்டியே வராமல் தடுப்பதே மிகச்சரியான வழியாகும். இதற்கு முதலில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் தேவை. குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிகுந்த மீன் உணவு, பாதாம்பருப்பு, சோயாபீன்ஸ், காளிஃப்ளவர், பச்சைநிறக் காய்கறிகள், கீரைகள், முட்டை, பால், பருப்பு, பயறுகள் போன்றவை மூட்டுத்தேய்மானத்தைத் தடுக்கும் வகையில் செயலாற்றுகின்றன.

தினமும் 30 நிமிட நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். ஒவ்வொரு நபரும் அவரது உயரத்திற்கு ஏற்ப சரியான உடல் எடையை பராமரிப்பதும் அவசியம். உட்காரந்த இடத்திலே வேலை செய்பவர்கள் என்றால், அரை மணி நேரத்துக்கு ஒரு முறையாவது கால், கைகளுக்கு அசைவு கொடுக்கும் வகையில் ஐந்து நிமிடங்கள் எழுந்து நின்று, நடந்துசெல்ல வேண்டியது அவசியம்.

பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு நடந்தே செல்வது, அலுவலகத்தில் மாடிப்படி ஏறிச்செல்வது, தரையில் அமர்ந்து சாப்பிடுவது போன்றவற்றையும் அவ்வப்போது செய்துவருவது அவசியம். கால் மூட்டுகளுக்கு போதிய கவனிப்பு கொடுத்துவந்தால் 80 வயதிலும் நடந்து செல்லும் அளவுக்கு மூட்டுகள் வலிமையாக இருக்கும். ஆகவே, நடந்து நடந்து கால் மூட்டுகளுக்கு வலிமை சேருங்கள்.

தொடர்புக்கு : 9994944228

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *