மகிழ்ச்சி

சின்ன ஆசைகளுக்கு பெரிய விலை கொடுக்காதீர்கள்

சுலோச்சனாவுக்கு வேலைக்குப் போவதற்கு ரொம்பவும் ஆசை. காலையில் எழுந்ததும் குளித்து அலங்காரம் செய்து, அழகான ஹேன்ட்பேக் மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் போகும் மாலதியைப் பார்த்துவந்த ஆசை என்றுதான் சொல்லவேண்டும். தோழிகளுடன் அரட்டையடித்தபடி வேலை செய்வதாகவும் கேன்டீனில் இஷ்டப்பட்டதை வாங்கி சாப்பிடுவதாகவும் மாலதி சொன்னதைக் கேட்டு வேலைக்குப் போகும் ஆசையை சுலோச்சனா நிறையவே வளர்த்துக்கொண்டாள்.

ஆனால், சுலோச்சனாவை வேலைக்கு அனுப்புவதற்கு அவள் கணவன் ராமலிங்கத்திற்கு இஷ்டமே இல்லை. வீட்டில் தேவையான வசதி இருக்கிறது, இரண்டு குழந்தைகளைக் கவனிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. பிறகு என்ன காரணத்திற்காக வேலைக்குப் போகவேண்டும் என்று கேள்வி கேட்டான் ராமலிங்கம்.

பெண்ணுக்கு சுதந்திரம் கிடையாதா… ஆசைப்பட்டதை நான் செய்யக்கூடாதா… வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சேவை செய்துகொண்டே இருக்கவேண்டுமா… நான் சந்தோஷமாக இருக்கவே கூடாதா என்று எதிர்க்கேள்வி கேட்டாள். சண்டை பிடித்தாள். வேலைக்குப் போயே தீருவேன் என்று அடம் பிடித்தாள். சுலோச்சனா அடங்காமல் அடம் பிடித்ததைக் கண்ட ராமலிங்கத்திற்கு கோபம் வந்தது. கை நீட்டினான். ஆத்திரமானாள் சுலோச்சனா. வீடு ரெண்டானது. இருவர் பக்கத்தில் இருந்தும் ஆட்கள் பஞ்சாயத்து செய்வதற்கு வந்தார்கள்.

கணவன், மனைவிக்குள் பிறர் வந்து நுழைவதும், தோட்டத்துக்குள் யானை புகுவதும் ஒன்றுதான். அவர்கள் உறவு தள்ளாடத் தொடங்கியது. இரண்டு பிள்ளைகளையும் தானே வைத்துக்கொள்ள முடிவு செய்தாள். தன்னுடைய ஆசைப்படி வேலைக்குப் போய் பிள்ளைகளை வளர்த்துக் காட்டுகிறேன் என்று சவால் விட்டாள் சுலோச்சனா. அவளுக்கு பெற்றோர் துணை இருந்ததால், பிள்ளையை அவர்கள் பொறுப்பில்விட்டு வேலைக்கு செல்லத் தொடங்கினாள்.

ஒரு மாதம் கழிந்தது.

சினிமாக்களில் காட்டுவது போல் அரட்டை அடித்துக்கொண்டே வேலை செய்யமுடியாது என்பதை உணர்ந்துகொண்டாள் சுலோச்சனா. வேலை விட்டதும் ஹோட்டலில் போய் சாப்பிட்டால், வருமானம் பத்தே நாட்களில் காலியாகிவிடும் என்பதும் புரிந்தது. இத்தனை நாட்கள் வீட்டில் சுகவாசியாக உட்கார்ந்துவிட்டதால், பிறர் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கும் சிரமப்பட்டாள். ஆனாலும் தன்னுடைய கர்வத்தை விட்டுத்தர முடியாமல் வேலைக்குப் போனாள்.

ராமலிங்கம் நாளுக்கு நாள் எரிச்சலானான்.  நான் என்ன தவறு செய்தேன், எனக்கு ஏன் இந்த நிலைமை என்று யோசித்தான். குழந்தைகள் இல்லாமல், மனைவி இல்லாமல் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று யோசித்தான். ஒன்று சேர்ந்துவாழ்வது அல்லது நிரந்தரமாக பிரிவது என்ற முடிவுடன் சுலோச்சனா வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சென்று தனியே பேசுவதற்குப் போனான். ஏதோ தவறு செய்ததற்காக, மேலதிகாரியிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்த சுலோச்சனாவைப் பார்த்தான். அவளும் ராமலிங்கத்தைப் பார்த்தாள். அடுத்தகணம் அதுவரை நடந்ததை மறந்து அவனிடம் ஓடோடி வந்தாள்.

என்னைத்தான் பார்க்கவந்தீங்களா என்று ஆசையாக கேட்டாள். இல்லை என்பதை சொல்லமுடியாமல் ஆம் என்றதும் சந்தோஷமானாள். அந்த சந்தோஷத்தில் வாய்விட்டு கதறி அழுதாள். எனக்கு வேலை வேண்டாங்க… வீட்ல பிள்ளைங்களை பார்த்துக்கிட்டு சந்தோஷமா இருக்கேங்க என்றாள். அதன்பிறகு இருவரும் ஒன்றுசேர்ந்தார்கள், சந்தோஷமாக வாழ்ந்தார்கள். ஆனால் அந்த திடீர் சந்திப்பு நடக்கவில்லை என்றால் அவர்கள் உறவு என்னவாயிருக்கும்? சுலோச்சனா பிரச்னைக்கு என்ன காரணம் தெரியுமா?

அவள் விரும்பியது மிகவும் சின்ன ஆசை என்பதை புரிந்துகொள்ளாமல் போனதுதான். ஆம், சுலோச்சனா மனதில் இருந்த ஆசை மிகவும் அற்பமானது. அதாவது தினமும் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும். தோழிகளுடன் அரட்டை அடிக்க வேண்டும். வாய்க்கு ருசியாக ஹோட்டலில் சாப்பிட வேண்டும். இவை எல்லாமே எளிதில் சாதாரணமாக நிறைவேறக்கூடிய சின்னச்சின்ன ஆசைகள்தான். ஆனால், வேலைக்குச் சென்றுதான் இவற்றை அடையமுடியும் என்று நினைத்துவிட்டாள் சுலோச்சனா.

ராமலிங்கம் மீதும் தப்பு உள்ளது. சுலோச்சனாவின் ஆசைகளைப் புரிந்துகொள்ளாமல், முரட்டுத்தனமாக வேலைக்குப் போகக்கூடாது என்று தடுத்தான். எதற்காக ஆசைப்படுகிறாள் என்று கேட்டிருந்தால், அவள் ஆசைகளை எளிதில் நிறைவேற்றித் தந்திருக்கலாம்.

வேலைக்குப் போவது சரியா.. தவறா?

சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் தேவையைப் பொறுத்தது. ஆனால் நம்மிடம் இல்லாத ஒன்றை நினைத்து வருத்தப்படுவதைவிட, நம்மிடம் எது இருக்கிறதோ அதற்காக சந்தோஷப்படுவது வாழ்க்கைக்கு நல்லது. அதனால் பெரிதாக ஆசைப்படுவதைவிட்டு சின்னச் சின்னதாக ஆசைப்பட்டால், அதை நிறைவேற்றுவது எளிது. வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நகரும்.

 

எதற்காக சின்னச்சின்னதாக ஆசைப்பட வேண்டும்..?

வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் சந்தோஷமாக இருப்பதுதான். சந்தோஷமாக இருப்பதற்கு பல்வேறு ஆசைகள் நிறைவேற வேண்டும். பெரிதாக ஆசைப்பட்டால் அதனை நிறைவேற்றுவது கடினம். அந்த ஆசை நிறைவேறும் வரை சந்தோஷம் கிடைக்காது. மேலும் பெரிய ஆசைக்காக சின்னச்சின்ன சந்தோஷங்களை தியாகம் செய்யவேண்டி இருக்கும். ஒருவேளை பெரிய ஆசை நிறைவேறவில்லை என்றால் வாழ்க்கையே நரகமாகத் தெரியும்.

 

பெரிதாக ஆசைப்பட்டால்தானே வாழ்க்கையில் முன்னேற முடியும்?

லட்சியம் பெரிதாக இருக்கலாம் ஆனால் அதனை அடையும் வழியில் ஏராளமான சின்னச்சின்ன ஆசைகள் இருக்கவேண்டும். பெரிய குறிக்கோளை அடைவதற்கு முன்பு, அந்த குறிக்கோளை சின்னச்சின்னதாக பிரித்துக்கொள்ள  வேண்டும். ஐந்து வருடங்களில் இரண்டாயிரம் அடியில் ஒரு சொந்தவீடு கட்ட வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கலாம். இந்த குறிக்கோளை 20 சின்னச்சின்ன ஆசைகளாக மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட பணம் சேர்ப்பது, இடம் தேர்வு செய்வது, வில்லங்கம் இல்லாமல் வாங்குவது, வரைபடம் தயார் செய்வது, கட்டுமானப் பொறியாளரை தேர்வு செய்வது என பிரித்துப்பிரித்து திட்டம் போடுவது நல்லது. ஒவ்வொரு திட்டம் நிறைவேறியதும் மனதுக்கு சந்தோஷமும் நம்பிக்கையும் வரும். வீடு கட்டும் குறிக்கோள் தள்ளிப்போனாலும் துன்பமாகத் தெரியாது. சரியான பாதையில் போகும் இன்பம் தெரியும்.

 

சின்னச்சின்னதாக ஆசைப்பட்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா?

சின்ன ஆசைகள் நிச்சயம் சந்தோஷம் தரும். அந்த சந்தோஷத்தை தக்கவைக்கும் சாமர்த்தியம் வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு எல்லாமும் எப்போதும் கிடைத்தாலும் மனம் சந்தோஷம் அடைவதில்லை. தன்னிடம் இல்லாத ஒன்றைத் தேடி ஏமாற்றம் அடையும். அதனால் மகிழ்ச்சி ஒரே இடத்தில் நிற்பதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, அதனை பிடித்துவைப்பதுதான் முக்கியம்.

 

சந்தோஷத்தை பிடித்துவைப்பது எப்படி?

ஒரு பெரிய ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவது சந்தோஷமாக இருக்கும். ஆனால் அடுத்த சாப்பாட்டு நேரத்தில் அந்த சந்தோஷம் மறைந்துவிடும். மீண்டும் எப்போது அதைவிட உயர்ந்த ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம் என்று நினைக்காமல்… ஹோட்டலில் எத்தனை நிறைவாக சாப்பிட்டோம் என்பதை நினைத்து நினைத்துப் பார்த்தால், சந்தோஷத்தை பிடித்துவைக்க முடியும். அதனால் உன்னிடம் என்ன இருக்கிறதோ அதனை உயர்வாக, சந்தோஷமாக நினை. அதுதான் நீடித்த சந்தோஷம் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *