யாக்கை

தூக்கம் எனும் மருத்துவரை உடலுக்குள் அனுமதியுங்கள்..!

 

மனித உடலின் சக்தி மகத்தானது. உடலின் சக்தியை இதுவரை எந்த மருத்துவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடிந்ததில்லை, அறிந்துகொள்ளவும் முடியாது. ஏனென்றால், உடல் என்பது எண்ணங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. எண்ணம் சரியாக இருந்தால், உடல் நலன், தானே நிகழ்ந்து விடும்.

கை நிறைய மருந்து, மாத்திரைகளுடன் குடும்பத்தலைவன் ஒருவன் ஞானகுருவின் எதிரே தென்பட்டான். அவனை தடுத்துநிறுத்தினார் ஞானகுரு.

‘’சரியான நேரங்களில் நீ தூங்குவதில்லையா..?’’

‘’ஏன் கேட்கிறீர்கள்..? அதெப்படி உங்களுக்குத் தெரியும்?’’ தடுமாறினான்.

‘’நீ போதுமான அளவு தூங்குபவனாக இருந்தால், இத்தனை மருந்தும், மாத்திரைகளும் தேவைப்படாது. உன் உடலைவிட சிறந்த மருத்துவன் இந்த உலகில் எவனுமில்லை. நீ விழித்திருக்கும் நேரத்தில் கவலை, கோபம், ஆசை, அழுத்தம், பயம், முறையற்ற உணவு ஆகியவற்றால் இதயம், நுரையீரல், வயிறு, சிறுநீரகம் போன்றவற்றைக் கெடுத்துக் கொள்கிறாய். இரவு நீ அமைதியாக உறங்கியதும், உன் எண்ணங்கள் உன் உடலை குணப்படுத்தும் பணியை செய்கின்றன. இதயத்தை, நுரையீரலை, சிறுநீரகத்தை அமைதிப்படுத்துகிறது. மூச்சு விடுவதை சீராக மாற்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் விழித்திருக்கும்போது, நீ கெடுத்து வைத்திருக்கும் உடலை, இரவு நேரத்தில் மனம் குணப்படுத்துகிறது…”

’’அப்படியென்றால் தூங்கினால் மட்டும் போதுமா..?’’

‘’அதனால்தான் எந்த நோய்க்கு போனாலும், நிம்மதியாக தூங்குவதற்கு ஒரு மருந்து தருகிறான் மருத்துவன். நீ பகலில் குறைவாக தவறு செய்தால், இரவில் உடல் எளிதில் தன்னைத்தானே சரி செய்துவிடும். ஆனால், நீ பகல் முழுவதும் தவறுகள் செய்துகொண்டே இருந்தால், உன்னைக் குணப்படுத்த ஓர் இரவு போதாது. நோய்க்கும், குணப்படுத்தலுக்குமான இடைவெளி அதிகரிக்கும்போது, எண்ணங்களே உன் உடல் மீது நம்பிக்கை இழந்து உன்னை கைவிட்டு விடும்…”

‘’தூக்கம் வர மறுக்கிறதே..?’’

’’உன் ஆழ்மனதில் தூக்கத்திற்கு ஆசைப்படு. ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.
முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்…’’


‘’ஆனால், நைட் ஷிப்ட் போகவேண்டிய கட்டாயம் இருக்கிறதே..”

‘’இனி, வேலைக்கே போகமுடியாத அளவுக்கு உடல் கெட்டுப் போகட்டும் என்று முடிவெடுத்துவிட்டால், யாரென்ன செய்ய முடியும்?” என்றபடி நகர்ந்தார் ஞானகுரு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *