யாக்கை

நோயைத் தடுப்பதற்கு பாதுகாப்பு வளையம் போதும்…!

இந்த உலகில் நோய்க்கும், பேய்க்கும் அச்சப்படுபவர்கள் அதிகம். கண்ணுக்குத் தெரியாத ஒன்றுடன் எப்படி போரிடுவது என்று பலருக்கும் தெரிவதில்லை. இவர்களுக்கு தீர்வு மிகவும் எளிது. ஆம், முள்ளை முள்ளால் எடுப்பது போல், கண்ணுக்குத் தெரியாமல் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும்.

இன்னமும் ஒல்லியாகவே முடியாது எனும் அளவுக்கு உடல் மெலிந்த பெண் ஒருத்தி, ஞானகுருவை தேடி வந்தாள்.

‘’பக்கத்து வீட்டில் ஒருவருக்கு காச நோய் இருக்கிறது, என்னை அது தொற்றிவிடும் என்று மிகவும் கவலையாக இருக்கிறது. நான் என்ன செய்வது..?’’

‘’பாதுகாப்பு வளையத்தை உருவாக்கு, அது கிருமிகளை தடுத்துவிடும்…”

‘’எப்படி..?’’

‘’அதிகாலையில் எழுந்து நுரையீரல் நிறைய காற்றை இழு. கண்களை மூடு. உன் மூடிய கண்களால் உன்னை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் உருவாக்கு. அந்த வளையத்தை உனக்கு ஏற்ற வகையில் வடிவமைத்துக்கொள். அது, இடி விழுந்தாலும் தாங்கிக்கொண்டு, உன்னை தாக்க முடியாத அளவுக்கு வலிமையாக வடிவமைத்துக்கொள்…”

‘’இடியை எப்படி பாதுகாப்பு வளையம் தாங்கும்..?’’

‘’தாங்கும் அளவுக்கு அதற்கு வலிமை கொடு. அந்த பாதுகாப்பு வளையம் நீ எங்கெங்கு சென்றாலும், உன்னுடனே வருவதற்கு ஆணையிடு. தினமும் காலையில் அந்த பாதுகாப்பு வளையத்தை சோதனை செய். ஒரு கட்டத்தில் அந்த பாதுகாப்பு வளையம் உன்னுடைய கூடாகவே மாறிவிடும். அதன்பிறகு, உன்னை கிருமியாலும், எதிரியாலும் நெருங்கவே முடியாது…”

‘’அதையும் மீறி வந்துவிட்டால்..?’’

’’வர முடியாத அளவுக்கு படைக்க வேண்டியதுதான் உன்னுடைய திறமை. தேவை என்றால் உனக்கு மட்டுமின்றி உன் கணவன், உன் குழந்தைகள் ஏன் உன்னுடைய வீட்டுக்கும் ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கு. அதன்பிறகு எதற்கும், யாருக்கும் அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை”

‘’அப்படியென்றால் டாக்டரிடம் போய் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டாமா..?’’

’’பாதுகாப்பு வளையத்தின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையென்றால், மருத்துவரிடம் செல். ஆனால், மருந்தின் மீதாவது முழு நம்பிக்கை வை… இல்லையென்றால் நோய் நிச்சயம் தாக்கிவிடும்…’’ என்றார் ஞானகுரு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *