மகிழ்ச்சி

கவலைப்படுவதற்கு மனிதர்கள் ஆசைப்படுவது ஏன்..?

மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை. என்னவெல்லாம் பிரச்னைகள் என்றுதான் சஞ்சலப்படுகிறான். அதுமட்டுமின்றி, முடிந்துவிட்ட பிரச்னைக்காக அதிகம் கவலைப்படுவது மனிதன் மட்டும்தான்.

அப்படித்தான் ஒரு வங்கி மேலாளர் ஞானகுருவை சந்திக்க வந்தார். ஞானகுருவிடம் ஆசி வாங்கியபிறகு, ‘என் தாயார் மரணத்தை இன்னமும் என்னால் தாங்கவே முடியவில்லை, தினமும் அந்த துன்பத்துடனே வாழ்கிறேன். நான் எப்படி அதில் இருந்து வெளியே வருவது…” என்று கேட்டார்.

‘’உன் தாயார் எப்போது மரணம் அடைந்தார்..?’’

‘’இரண்டு வருடங்களாகிவிட்டது. என் தந்தையின் துணையின்றி என்னை கஷ்டப்பட்டு வளர்த்தவர். நான் மேனேஜராக பதவி உயர்வு பெற்றதை, அதாவது என் வாழ்வின் வெற்றியைக் காணாமல் மறைந்துவிட்டார்… இத்தனை நாட்களாகியும் அந்த துன்பம் என்னை தினமும் வாட்டி வதைக்கிறது’’ என்றார்.

‘’உனக்கு பதவி உயர்வு எப்போது கிடைத்தது..?”

‘’ஆறு மாதங்களாகிறது…””

‘’அது உனக்கு எவ்வளவு சந்தோஷம் கொடுத்தது..?”

‘’நிறையவே சந்தோஷப்பட்டேன். என் உறவினர்கள், நண்பர்களுக்கு பார்ட்டி வைத்தேன்…’’

‘’ஏன் அதை நினைத்து இப்போது நீ சந்தோஷப்படவில்லை..?””

‘’அது முடிந்துபோன விஷயம்.. அதை இன்னமும் எப்படி பிடித்துவைத்து கொண்டாட முடியும்…””

‘’உன் தாயார் மரணத்தை மட்டும் இன்னமும் ஏன் இன்னமும் பிடித்துவைத்திருக்கிறாய்… அவரை முதலில் விடுதலை செய்” என்றார் ஞானகுரு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *